
கனடாவின் ஒன்டாரியோ பீல் பிராந்தியத்தின் தலைமை பொலிஸ் அதிகாரியாக இலங்கை தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பீல் பிராந்தியத்தின் புதிய தலைமை பொலிஸ் அதிகாரியாக ஹால்டன் பிராந்தியத்தில் பிரதி பொலிஸ் அதிகாரியாக பணியாற்றிய நிஷான் துரையப்பா நியமிக்கப்பட்டுள்ளார். ஒன்டாரியோ பிராந்தியத்திற்கு நியமிக்கப்பட்ட முதலாவது தெற்காசிய தலைமை பொலிஸ் அதிகாரி இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
25 ஆண்டுகள் சேவை அனுபவம் கொண்டுள்ள நிஷான் குற்ற விசாரணைப் பிரிவின் கீழ் போதைப் பொருள் ஒழிப்பு, பாதாள உலக குழுக்கள் தொடர்பான விடயங்களைக் கையாண்டுள்ளதுடன் சிறப்பு அதிரடிப்படை பிரிவிலும் பணியாற்றியுள்ளார். ஒக்டோபர் முதலாந்திகதி அமுலுக்கு வரும் வகையில் இவருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிஸ் சேவைகள் சபை அறிவித்துள்ளது. நிஷ் என அழைக்கப்படும் நிஷான் துரையப்பா என்பவர் யாழ்ப்பாணத்தின் முன்னாள் மேயர் அல்பிரட் துரையாப்பாவின் பேரன் என தெரிவிக்கப்படுகின்றது. 1975 ஆம் ஆண்டு அல்பிரட் துரையப்பா படுகொலை செய்யப்பட்ட பின்னர் இவர்கள் கனடாவின் பீல் பிராந்தியத்திற்கு அகதிகளாக சென்றுள்ளனர். இதன்போது நிஷான் துரையப்பா 3 வயதானவர் என தெரிவிக்கப்படுகின்றது. (ஸ)