
“உங்கள் தந்தை ஆட்சிக்கு வந்தால், இணைந்த வடக்கு, கிழக்கில் அரசியல் தீர்வை வழங்க தயாரா? தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் என்ற உத்தரவாதத்தை வழங்க முடியுமா?” என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி உரையாற்றினார்.
இதன்போது ஒழுங்குப்பிரச்சினையொன்றை எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ “தமிழ் மக்களுக்கு 2015 இல் வழங்கிய வாக்குறுதியை இந்த அரசாங்கம் மீறிவிட்டது.
கூட்டமைப்பும் அதை நிறைவேற்ற பாடுபடவில்லை. எமது ஆட்சியில் முன்னாள் போராளிகளை புனர்வாழ்வளித்து விடுதலை செய்தோம்” என குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த சிறிதரன், “நாங்கள் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள். இந்த கேள்வியை நீங்கள் அரசிடம்தான் கேட்கவேண்டும்.
ஆட்சிக்கு வரும்வரைதான் எல்லாம். நீங்கள் சிறைக்கு சென்ற பிறகுதான், கைதிகளின் வேதனை புரிந்துள்ளது. நீங்கள் உண்மையாகவே அக்கறையுள்ள நபர் எனில், உங்கள் தந்தை ஆட்சிக்கு வந்த பிறகு இணைந்த வடக்கு, கிழக்கில் தீர்வை வழங்குவார் என்று உறுதியளிக்கமுடியமா? காணாமல்போனோர் பிரச்சினை, அரசியல் கைதிகள் விவகாரத்துக்கு தீர்வுகளை காணமுடியுமா?” என கேள்வியெழுப்பினார்.
இதற்கு நாமல் பதிலளிக்க எழுந்தபோதும், சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினர் அதற்கான வாய்ப்பை மறுத்துவிட்டதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார்.