
அபிவிருத்தி இலக்கை அடைய வேண்டுமாயின் இலங்கையை தொழிநுட்ப துறையில் மேலும் வலுப்படுத்த வேண்டும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,
இலங்கையின் மனித வளத்தின் பலவீனம் காரணமாக வெளிநாட்டவர்களை சுற்றுலா வீசா அனுமதியில் இலங்கைக்கு அழைத்து தொழில்களில் ஈடுபடுத்துகின்றனர்.
எமது நாட்டில் கணனி செயலிகளை உருவாக்குபவர்கள், தேயிலை, இறப்பர், ஆடை உற்பத்தி ஆகிய அந்நிய செலாவணியை ஈட்டும் பிரதான துறைகளை விட அதிகளவில் சம்பாதிக்கின்றனர்.
எமது நாட்டில் வயலில் வேலை செய்யவும் சேனைகளில் தொழில் புரியவும் நிர்மாணத்துறைகளில் பணியாற்றவும் பலர் விரும்புவதில்லை. இந்த கசப்பான உண்மையை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து சுற்றுலா வீசாவில் வந்துள்ள சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் பேர் நாட்டில் கூலி தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நான் ஒரு முறை மொரவெவ பகுதிக்கு சென்றிருந்தேன். இந்தியாவில் இருந்து வந்தவர்கள் அங்கு நெல் அறுக்கின்றனர். விவசாயிகள் வயலில் இறங்குவதில்லை.
அவர்கள் கையில் கைத்தொலைபேசிகளை கையில் வைத்து கொண்டு வீதியில் இருக்கின்றனர். சுருக்கமாக கூறினால், அவர்கள் கைத்தொலைபேசிகள் மூலம் நெல் அறுக்கின்றனர் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.