
இலங்கையில் தற்போது பெரும் அதிர்ச்சியையும், குற்றம் செய்பவர்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ள விடயமே “மீண்டும் மரண தண்டனை” என்ற ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு.
ஒரு சிலர் இதற்கு ஆதரவு தெரிவித்தாலும், மறு பக்கம் “மரண தண்டனை வேண்டாம்” என்ற கருத்தும் எழுகின்றது.
ஆனால் இலங்கையின் தற்போதைய நிலையை எடுத்துக் கொண்டால் பாரிய ஆபத்தை நோக்கி நகர்ந்து செல்வதை காணக்கூடியதாக உள்ளது.
வடக்கு முதல் தெற்குவரை வியாபித்துள்ள போதைப்பொருள் வர்த்தகமும், போதைப்பொருள் பாவனையும், இதனால் வாழ்க்கையை சீரழித்துக்கொள்ளும் இளம் தலைமுறையினர்.
மறுபக்கம் போதைப்பொருள் பாவனையால் போதை தலைக்கேறி அதனால் ஏற்படும் விளைவுகளும் ஏராளம்.
ஒன்றுமறியாத பச்சிளம் குழந்தைகள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்படுவதும், மாணவ மாணவிகளுக்கு நடக்கும் கொடுமைகளும், போதையால் ஏற்படும் குடும்பப் பிரச்சினைகள் என பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
போதைப்பொருள் வர்த்தகத்திற்கு தண்டனை வழங்கப்பட்டாலும், குற்றங்கள் குறைந்தபாடில்லை. சிறையிலிருந்தே வெளியில் வியாபாரத்தை மேற்கொள்ளும் இடமாக இன்று சிறைச்சாலைகள் காணப்படுகின்றன.
இவ்வாறான நிலையில் தான் ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம் “மரண தண்டனை”.
இதன் மூலமாவது போதைப்பொருள் பாவனை குறையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால் அதற்கு முன் தூக்குதண்டனை என்றால் என்ன? அது எவ்வாறு வழங்கப்படுகின்றது என்பதை பற்றி பார்ப்போம்….
மரண தண்டனை எவ்வாறு நிறைவேற்றப்படுகிறது? மரண தண்டனைக் கைதியின் நிலை என்ன? தூக்கு மேடையிலே என்ன நிகழ்கிறது….
குற்றவியல் சட்டக்கோவையின் 296ஆவது பிரிவில் (மனிதப் படுகொலை) சொல்லப்பட்ட மற்றும் சட்ட விரோதமான போதைப் பொருள் (ஹெரோயின்) இரண்டு கிராம்களுக்கு கூடுதலான அளவைத் தன்வசம்வைத்திருந்த குற்றச்சாட்டில் அக்குற்றம் நிரூபணமாகும் பட்சத்தில் மேல் நீதிமன்ற நீதிபதியினால் மரண தண்டனை விதிக்கப்படும்.
இவ்வாறு மரண தண்டனைக்கு உள்ளாகும் நபர் மேல் நீதிமன்றத்தினால் ‘ஜெயிலர்’ தரத்தை உடைய அதிகாரியிடம் அப்போதே ஒப்படைக்கப்படுவார்.
போகம்பரை மற்றும் வெலிக்கடைச் சிறைச்சாலைகளில் மாத்திரம், தூக்கு மேடைகள் இருந்தன.
போகம்பரை சிறைச்சாலை பல்லேகலவுக்கு மாற்றப்பட்ட பின்னர், போகம்பரை தூக்கு மேடையும் அகற்றப்பட்டது.
நாட்டில் இவ்விரண்டு சிறைச்சாலைகளில் மாத்திரமே தூக்கு மேடைகள் இருந்தன. போகம்பறையின் தூக்கு மேடை மூவரை ஒரே சமயத்தில் தூக்கிலிடும் வசதி கொண்ட விசேடமானது.
மேற்படி சிறைச்சாலைகளில் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்படும் கைதியொருவர் சம்பந்தப்பட்ட சிறைச்சாலையின் பிரதான இரு ஜெய்லர்களிடம் ஒப்படைக்கப்படுவர்.
உரிய தண்டனை விதிக்கப்பட்ட கைதியையே தாம் பொறுப்பேற்றதாக அவர்கள் கையெழுத்திட்டு உறுதி செய்யவேண்டும்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதி அவருக்குரிய தண்டனை (தூக்கிலிடுதல்) அங்கீகரிக்கப்படும் வரை விசேட அறையொன்றினுள் காவலில் வைக்கப்படுவார்.
தண்டனைக்கான அங்கீகாரம் கிடைத்த பின் உரிய சிறைச்சாலையின் தலைமை அதிகாரியினால் கையெழுத்திடப்பட்ட உரிய ஆவணத்தின் பிரதியொன்று கைதியிடம் வழங்கப்படும்.
அதன் பின் கைதியைப் பார்வையிட பெற்றோர் மனைவி மக்கள் சகோதர சகோதரிகள் மாத்திரமே அனுமதிக்கப்படுவர்.
உறவினர் அல்லாத ஒருவர் அக்கைதியைப் பார்வையிட விரும்பினால் சிறைச்சாலைத் தலைமை அதிகாரியின் விசேட அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
மரண தண்டனைக் கைதியின் விருப்பத்தின் பேரில் அன்றி பிற மதத் தலைவர் ஒருவர் கைதியைப் பார்க்க அனுமதிக்கப்பட மாட்டார்.
அவ்வாறான ஒருவரைக் காணகைதி விரும்பும் பட்சத்தில் ஜெய்லர் ஒருவரின் மூலமாக தலைமை அதிகாரிக்கு விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டும். அதன் பின்னரே அது நிறை வேற்றப்படும்.
தனது மதத்தினால்அங்கீகரிக்கப்படாத ஒரு உணவு வகை வழங்கப்பட்டால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் உரிமை மரண தண்டனை கைதிக்கு உண்டு. வைத்திய அதிகாரியினது சிபாரிசின் பிரகாரம் வேறு அவர் விரும்பும் வகை உணவு அவருக்கு வழங்கப்பட வேண்டும்.
மேலும் அவருக்கு வெற்றிலை பாக்கு, சுண்ணாம்பு, புகையிலை அடங்கிய 3 சுருள் வெற்றிலை, 3 சிகரட் அல்லது 3 தடவைகள் சுங்கானில் நிரப்ப போதியதான புகையிலைத் தூள் வழங்கப்படலாம்.
காலை உணவாக 3 அப்பம், இடியப்பம், 2 வாழைப்பழம், ஒரு தேனீர் மற்றும் அரை கப் சீனி என்பன வழங்கப்பட வேண்டும். ஏனைய வேளை உணவுகள் சிறை வழமைக்கேற்பவே.
இனி மரண தண்டனை நிறைவேற்றப்படும் விதம்….
மரண தண்டனைக்கு உட்படுத்தப்படும் அனைவருமே தூக்கிலிடப்படுவதில்லை. சிலரது மரண தண்டனை ஆயுட்கால தண்டனையாக மாற்றப்படுகிறது. இன்னும் சிலர் மன்னிக்கப்படுகின்றனர். பெண்கள் தூக்கிலிடப்படுவதே இல்லை.
ஒரு சமயம் ஒரு பெண் தூக்கிலிடப்படுவதற்கு முன் மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனையில் அவர் ஒரு கர்ப்பிணி என தெரியவந்தது. அன்றிலிருந்து பெண்களுக்கு மரண தண்டனை ஆயுட்கால தண்டனையாகிறது.
ஜனாதிபதி கையெழுத்திட்டு ஆணை வழங்கினால் மட்டுமே ஒருவரைத் தூக்கிலிட சட்டம் அனுமதிக்கிறது. கைதியை தூக்கிலிடும் நாளும் அவராலேயே தீர்மானிக்கப்படுகிறது.
மரண தண்டனையை நிறைவேற்ற அங்கீகரிக்கப்பட்ட நேரமொன்றும் உள்ளது. காலை 08.05 என்பதே தண்டனை நிறைவேற்றப்படும் நேரமாகும்.
தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் கைதி தூக்கிலிடப்பட ஆறு தினங்களுக்கு முன் வேறிடத்துக்கு மாற்றப்படுவார்.
அவ்வாறு மாற்றப்படும் கைதி இருள் அறைக்கு அழைத்துச் செல்லப்படுவார். தூக்கு மேடையை நோக்கி அவ்வாறான ஆறு அறைகள் அமைந்துள்ளன.
முதல் நாள் முதலாவது அறை. மறுநாள் இரண்டாவது அறை எனும் வரிசைக் கிரமப்படி தினமும் கைதி தூக்கு மேடையை நெருங்கிக் கொண்டிருப்பார்.
நான் இன்னும் எத்தனை நாள் எத்தனை மணி நேரம் எத்தனை நிமிடங்கள் உயிர் வாழப் போகிறேன் என்பதை எண்ணி வருந்திக் கொண்டே இருப்பார்.
ஆறாவது நாள் ஆறாவது இருள் அறையில் அடைக்கப்படுவார். ஏழாவது நாள் பொழுது புலர்ந்தால் அவர் விதி நிர்ணயிக்கப்பட்டு விடும். அவரது கதை காற்றோடு கலந்து விடும்.
இங்கிருந்து தான் ‘அலுகோசு’ என பொதுவாக அழைக்கப்படும் தூக்கு மேடை அலுவரின் சேவை தேவைப்படுகிறது.
அவர் வெலிக்கடை சிறைச்சாலையிலேயே இருப்பார். அவரது சேவை போகம்பரை சிறைச்சாலைக்கு தேவைப்படுமிடத்து இங்கு வரவழைக்கப்படுவார்.
ஒரு கைதி தூக்கிலிடப்படுவதற்கு முதல் நாள் பகல் 12.00 மணிக்கு முன்னர் அவர் போகம்பரை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்படுவார்.
இங்கு அவர் சிறைச்சாலை தலைமை அதிகாரியின் நேரடி பொறுப்பில் விடப்படுவார்.
அவருக்கு உதவியாளர் ஒருவரும் இருப்பார். மேற்படி தூக்கு மேடை அலுவலர் தன்னால் நிறைவேற்றப் படவிருக்கும் கடமைக்கு தேவையான அனைத்தும் தயார் நிலையில் உள்ளனவா என்பதை சரி பார்க்க வேண்டும்.
தூக்கு மேடைக்கு தேவையான அனைத்தையும் சரி பார்ப்பதோடு தூக்கு மேடையின் இயக்கம் சீராக நடைபெறுகிறதா என்பதையும் கவனித்து தான் திருப்தி அடைவதாக சிறைச்சாலை தலைமை அதிகாரியிடம் உறுதி செய்ய வேண்டும்.
இன்னும் எஞ்சி இருப்பது வைத்திய அதிகாரியின் அத்தாட்சி மட்டுமே. கைதி தூக்கிலிடப்படுவதற்கு முன்னர் வைத்திய பரிசோதனை ஒன்றுக்கு உற்படுத்தப்பட வேண்டியதும் அத்தியாவசியமாகும்.
அந்த பரிசோதனையின் போது கைதியின் தேக நிலை பற்றிய பொதுவான பரிசோதனை ஒன்று மேற்கொள்ளப்படும். குறிப்பாக அவரின் கழுத்து பகுதி சம்பந்தமாக வித்தியாசங்கள் எதுவுமில்லை. இயற்கையான நிலைமையில் உள்ளதா என உறுதி செய்யப்பட வேண்டும்.
அத்தோடு இப் பரிசோதனைமுடிவுகள் சம்பந்தப்பட்டவரைத் தூக்கிலிட இருக்கும் அலுவலருக்கு தெரியப்படுத்த வேண்டியது கட்டாயமாகும்.
இப் பணிகள் யாவுமேதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முதல் நாளன்றே நிறைவு செய்யப்பட்டு விடும்.
தண்டனை நிறைவேற்றப்பட வேண்டிய குறிப்பிட்ட நாள் விடிந்ததும் அதற்கான பணிகள் நிறைவேற்றப்படும். அப்போது கைதி தான் புரிந்த தவறை எண்ணி மனம் வருந்துவார். தன் பெற்றோர் சகோதர சகோதரிகள்,மனைவி மக்களை எண்ணி கண்ணீர் சிந்தி கதறி அழுவார்.
மரண தண்டனைக் கைதியின் இறுதி சில நிமிடங்கள்…..
அவர் இறுதியாக உண்ண விரும்பும் அங்கீகரிக்கப்பட்ட உணவு அவருக்கு வழங்கப்படுகிறது. இறுதியாக அருந்த விரும்பும் அங்கீகரிக்கப்பட்ட பானம் அவருக்கு கொடுக்கப்படுகிறது.
சந்திக்க விரும்பும் இரத்த உறவு அழைத்துவரப்படுகிறது. காண விரும்பும் மதத் தலைவரை சந்திக்கவும் அவகாசம் தரப்படுகிறது. நேரம் நெருங்கிக் கொண்ருக்கிறது.
மரணத்தை எதிர் நோக்கும் கைதியின் மேலாடை அகற்றப்படுகிறது. விசேட நாரினாலான அங்கியொன்று அணிவிக்கப்படுகிறது.
வாரினால் அது இறக்கப்படுகிறது. அதன் பின் எவ்வளவு பெரிய பல சாலியாக இருந்த போதிலும் உடலை சற்றும் அசைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அடுத்து முக மூடித் தொப்பி அணிவிக்கப்படுகிறது.
கால்களை அசைக்கமுடியாதவாறு வார்களால் (பெல்ட்) கட்டப்படுகின்றன.
மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாளில் சிறைச்சாலைக்குள் மயான அமைதி நிலவும் விதத்தில் ஏனைய கைதிகள் கட்டுப்பாட்டில் பலத்த காவலோடு வைக்கப்பட்டிருப்பர்.
ஒரு முக்கிய விடயம் என்னவென்றால் அன்று காலை முதல் சிறைச்சாலைக்கு வெளியே இருந்து உள்ளே நுழையும் படியாக உள்ள சகல வாயிற் கதவுகளும் பூரணமாக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
மரண தண்டனை நிறைவேற்றப்பட ஒரு நிமிடத்துக்கு முன்னராவது அவரை தண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்கான ஓலை ஜனாதிபதியிடமிருந்து அல்லது ஒத்திவைப்பு ஆணை உயர் நீதிமன்றத்திலிருந்து அப்படியுமல்லாது அவரது தண்டனை நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கான வேறு எதும் செய்தி ஒன்று வரலாம் என்ற எதிர்பார்ப்புடன் இவ்வாறு உள் நுழையும் கதவுகள் திறந்து வைக்கப்படுகின்றன.
காலை நேரம் 08.05ஐ நெருங்கும் போது கைதி மேடைக்கு எடுத்துச் செல்லப்படுகிறார். அங்கே சிறைச்சாலையின் தலைமை அதிகாரி, பொறுப்பாக இருந்த இரு ஜெய்லர்கள், சிறைச்சாலை வைத்திய அதிகாரி தூக்கு மேடையை இயக்கும் அலுவலரும், உதவியாளரும் மட்டுமே அவரோடு அங்கே இருக்கின்றனர்.
தூக்கு மேடையில் பொருத்தப்பட்டுள்ள தொண்டுக் கயிற்றின் மறுமுனை கைதி உணராத முறையில் அவர் கழுத்தைச் சுற்றி இருக்கும்.
காலை சரியாக 08.00 மணி 04 நிமிடம் 59வது செக்கன் தாண்டியதும் உரிய அலுவலர் தன் கடமையை செய்வார்.
கைதியை நிற்கவைத்திருந்த பலகை தடார் என கீழே விழும். அத்தோடு கதையும் முடிந்து விடும்.
பின்னர் வைத்தியஅதிகாரி பரிசோதித்து அவர் உயிர் பிரிந்து விட்டது என்று முடிவு செய்த பின்பு தான் அது உறுதியாகும்.
மரணத்தின் பின்….
கைதி உயிரோடிருக்கும் போது உள் நுழைந்த வாசலாலன்றி உயிர் பிரிந்த பின் வேறு வாசலால் அவர் உடல் வெளியேற்றப்படும்.
அந்த உடலை தோளில் சுமந்து செல்ல சட்டம் இடமளிக்காது. தாழ்வாகவே சுடலைக்கு எடுத்துச் செல்லப்படவேண்டும். அவரின் புதை குழியும் கூட அடையாளம் தெரியாதவாறு பூமியோடு சம நிலைப்படுத்தப்பட வேண்டும்.
குற்றவியல் சட்டக்கோவையின் 296வது விதிமுறையை மீறியதால் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டவர் என்பதனாலேயே இந்த நடைமுறை அமுல் செய்யப்படுகிறது.
தூக்குமேடையின் துயரம் இவ்வளவு தான்…
இலங்கையில் மேல் நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும், கொலை மற்றும் பொதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதித்து வந்த போதிலும், 1976ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் திகதிக்குப் பின்னர் யாருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
அந்தவகையில் தற்போது பாரியளவு போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு நீதிமன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 19 பேரின் பெயர் பட்டியல் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு தூக்கு கிடைக்குமா? அல்லது இவர்களை பயமுறுத்துவதற்காக இந்த நடவடிக்கையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…